.

இதெல்லாம் ஒரு ஹாட் ந்யூஸா?

.

.
.

.

என்னைச்சொன்னேன்.....வடிவேலு

Thursday, February 16, 2012

முதல் முதலா ஒரு நல்ல சேதி


இந்தியா ரொம்ப முன்னேறிருச்சுங்கோ
தமிழ்நாடு அண்மைக் காலமாகவே முக்கியச் செய்திகளில் அடிபட்டு வரும் நிலையில் மற்றொரு தலைப்புச் செய்தியாக வெளிவந்துள்ளது, சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் வேலை செய்யும் ஒரு ஆசிரியை தம்முடைய மாணவனால் படுகொலை செய்யப் பட்டு இருக்கிறார் என்ற அதிர்ச்சி அளிக்கும் செய்தி. மாணவன் படிப்பில் கொஞ்சம் மந்தமாக இருக்க ஆசிரியை உமா மகேஸ்வரி மாணவனுடைய பெற்றோரை பள்ளிக்கு அழைத்து கண்டித்துள்ளார். இச்செயல் காரணமாக கோபமுற்ற மாணவன் தம் ஆசிரியை உமா மகேஸ்வரியை குத்திக் கொலை செய்துள்ளார். பெற்றோரை இழந்து தவிக்கும் ஆசிரியையின் குழந்தைகள், கொலைகாரன் என்ற கரும்புள்ளியோடு எதிர்கால வாழ்வையே தொலைத்து நிற்கும் மாணவன் என இரு பக்கத்திலும் இழப்பை சந்தித்துள்ள நிலையில் யாரை நொந்து கொள்வது? இன்றைய தலைமுறை மாணவர்கள் கையில் விலை உயர்ந்த செல்போன், லேப் டாப் என சுற்றுவதும் மாணவர்களைச் சீரழிக்கிறது என்பதை எந்த பெற்றோரும் உணவர்தாக இல்லை. இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு கேமரா உள்ள விலை உயர்ந்த செல்போன், இன்டர்நெட் இணைப்புடன் லேப்டாப், தனி அறை என சகல வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்கும் பெற்றோர்கள் அவர்கள் சரியாகத்தான் செயல்படுகிறார்களா என்பதைக் கவனிக்க தவறி விடுகின்றனர். ஆசிரியையைக் கொலை செய்த மாணவன் தினமும் பள்ளிக்கு காரில் தான் சென்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தினமும் ரூ 100 வரை மாணவனின் செலவுக்காக பெற்றோர்கள் பணம் கொடுத்துள்ளனர். மேலும் வித விதமான செல்போன், வீட்டில் தனி அறை என சகல வசதிகளும் மாணவனுக்கு அளிக்கப் பட்டுள்ளது. கொலை செய்த மாணவன் அண்மையில் வெளியாகிய இந்திப் படம் ஒன்றை 30 தடவைக்கு மேல் பார்த்துள்ளானாம். இது யார் தவறு? மாணவனின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தவறிய பெற்றோரின் தவறே. ஒரு மாணவன் தன் எதிர்காலத்தைத் தொலைத்து கொலைகாரன் என்ற கரும்புள்ளியைச் சுமக்க பெற்றோர் ஒரு காரணமாக இருந்தாலும் அவனைச் சுற்றியுள்ள சமூகத்துக்கும் இதில் பெரும்பங்கு உள்ளதை மறுக்க முடியாது. அண்மைக் காலமாக தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இயங்கும் தனியார் பள்ளிகள் வணிக நோக்கோடு உருமாறி உள்ளதையும் மறுக்க முடியாது. 100% தேர்ச்சி ஒன்றையே குறிகோளாகக் கொண்டு தனியார் பள்ளிகள் பணம் கொட்டுகிறது என்பதற்காக படிப்பில் கொஞ்சம் சுமாரான பணக்கார மாணவர்களையும் சேர்த்துக் கொண்டு பின்னர் பள்ளியின் தேர்ச்சியைத் தக்க வைக்க மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து வரச் சொல்லுவது என டார்ச்சர் செய்வது மாணவர்களின் மனதில் ஒருவித நஞ்சை விதைப்பது என்னவோ உண்மை. நன்றாகப் படித்தாலும் ஏழை மாணவர்கள் அட்மிசன் கேட்டு தனியார் பள்ளி வாசலில் ஏறினால் அவர்களுக்கு அட்மிசன் கொடுக்க மாட்டார்கள் என்பது தனிக் கதை. தனியார் பள்ளி முதலாளிகளும் 100% தேர்ச்சிக்காக தம் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை வறுத்து எடுப்பதால் ஆசிரியர்கள் தம்மிடம் பயிலும் மாணவர்களை வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் கொலை செய்த மாணவன் ஒரு இந்திப் படத்தை 30 தடவைகள் பார்த்து அதில் வரும் கொலைக் காட்சி போன்று தம் ஆசிரியையை குத்திக் கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளான். மாணவர்களை படிப்பதை விட்டு திசை திருப்புவதிலும் அவர்களின் கவனத்தைத் தம் பக்கம் திருப்புவதிலும் திரைத்துறைக்கு முக்கிய பங்கு உண்டு. திரைப் படங்களில் கொலை, வன்புணர்வு, ஆபாசப் பாடல் காட்சிகள் இல்லாத திரைப் படத்தைக் காண்பது அரிதாகவே உள்ளது. நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கோடிக் கணக்கில் சம்பாதிக்க நம் சமூக அமைப்புக்கு ஒவ்வாத காட்சிகளை வைத்து இளம்பிஞ்சுகளின் வாழ்வில் விளையாடுவது என்றுதான் தடுத்து நிறுத்தப் படப் போகிறதோ தெரிய வில்லை. நம் சட்ட அமைப்பும் வலுவானதாக இல்லாததும் இதற்கு ஒரு காரணம். கொலை வழக்குகள் விரைவாக விசாரிக்கப் பட்டு கொலை செய்தவனுக்கு உடனடியாக மரண தண்டனை அளிக்கப் படும் நிலையில் கொலை பற்றிய ஒரு அச்ச உணர்வு மக்களிடம் இருக்கும். தற்போது ஒன்றுமில்லாத காரணங்களுக்கெல்லாம் கொலை செய்யும் அளவுக்கு கொலை மலிந்து விட்டதற்கு வலுவில்லாத நம் சட்ட அமைப்பும் ஒரு காரணம். தினமும் தொலைக் காட்சி, தினசரிகள், இணைய செய்தித் தளங்கள் என எதைத் திறந்தாலும் ஆயிரத்தெட்டு கொலைச் செய்திகள் இது போன்றவைகளைப் படிக்கும் மாணவர்களது எண்ண ஓட்டங்கள் எவ்வாறு இருக்கும்? எல்லாவற்றையும் தாண்டி இன்றையச் சூழ்நிலையில் மாணவர்களின் படிப்பை கெடுக்க வந்து இருக்கும் சமூக வலைத் தளங்கள்! பேஸ் புக், டுவிட்டர், ஆர்குட் என பரவலாகியுள்ள சமூக வலைத் தளங்களில் உறுப்பினராகியுள்ள மாணவர்கள் பலர் இதில் பெரும்பகுதி நேரத்தைக் செலவளிப்பதையும் மறுக்க முடியாது. இதில் சில நன்மைகள் இருந்தாலும் இது ஒரு சிலரை வழி கெடுக்கிறது என்பது தான் யதார்த்த உண்மை. அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் ஆக்கத்திற்கு வழி வகுக்க வேண்டும். நம் ஆக்கத்திற்கு வழி வகுக்காமல் நம் சந்ததிகளின் வாழ்வைக் சீரழிக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளை எங்களுக்கு காட்டித் தராதே இறைவா என்று வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை. அந்தப் பிள்ளைகள் காட்டுமிராண்டித் தனமாய் எல்லாக் குழந்தைகளையும் இன்ஜினியர்களாய் மாற்றனும்னு அலையுற பெற்றோரை உதைக்கலாம். 30,40 மார்க் கூட வாங்க முடியாத பிள்ளைகளை இன்ஜினியர்களாய் மாற்றனும்னு அலையுற பெற்றோர்களுக்கு அதுதான் முடிவு. குறைந்த சம்பளத்தில் கஸ்ட்டப்படும் டீச்சர்களை கொல்ல வேண்டாம். எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு. அரசு பள்ளிகளில் ஏதாவது நடந்துருச்சுன்னா ஊர் பேரு, தெருப் பேரு, ஹெட்மாஸ்டர் பேரு, வாட்ச் மேன் பேரு கூட போடுறாங்க பேப்பர்கல்ல. ஆனால் அதுவே தனியார் பள்ளின்னா ஊர் பேரைப் போட்டு ஒரு தனியார் பள்ளியில் என்று போட்டுர்றாங்க. ஏன்? நல்ல வேளை, இந்தியாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் என்று போடாமல் விட்டார்களே! ஆனால் டீச்சர் கொலைக் கேஸில் மாட்டர் பெரிசாய் போய்ட்டதாலே டான் பாஸ்கோன்னு பேரைப் போட்டாங்க. எனக்கு தெரிஞ்ச ஒரு வீட்டு வேலை பார்க்குற அம்மா தன் இரண்டு பிள்ளைகளையும் மெட்றிகுலேசனில் சேர்த்து விட்டு சாப்பாட்டுக்கே கஸ்ட்டப் படுறாங்க. அந்த பிள்ளைகள் படிச்சாலாவது பரவாயில்லே. 20,30 ன்னு மார்க் வாங்கிவிட்டு ட்யூஷன் வைன்னு அம்மாவை டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்காங்க. தேவையா இது. எல்லோரும் இஞ்சினீயர் ஆயிட்டா அப்புறம் கொத்தனார் சித்தாளுக்கெல்லாம் எங்கே போறது. உலகம் பூரா ஒரே வாழைப்பழமா இருக்குன்னு வச்சுக்குங்கங்க. சகிக்குமா. இயற்கையின் சம நீதிச் சட்டம்னு ஒன்னு இருக்கே. இந்தியா ரொம்ப முன்னேறிருச்சுங்கோ.

No comments:

Post a Comment